சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிகையில், “சுமார் 5.8 கிமீ உயரத்தில் தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 5.8 கிமீ உயரத்தில் வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
சுமார் 0.9 கிமீ உயரத்தில் மன்னார் வளைகுடா முதல் மத்திய மகாராஷ்டிரா வரை, தமிழகம் மற்றும் உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, ஈரோடு, சேலம், மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மற்றும் புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்
இந்த நிலையில் காலை 10 மணி வரை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




