தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து இயல்பைவிட அதிக மழைப்பொழிவை வழங்கிய நிலையில், நவம்பர் மாதத்தில் இதுவரை மழையின் அளவு குறைந்துள்ளது. அவ்வப்போது உருவாகும் வளிமண்டலச் சுழற்சிகள், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக சில இடங்களில் மட்டும் மழை பெய்து வருகிறது. இதனால் வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் குறைந்துள்ளதுடன், மாநிலத்தின் ஒட்டுமொத்த மழைப்பொழிவிலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பாதை!
அதன்படி, சுமார் 1.5 கி மீ உயரம் வரை லட்சத்தீவின் தெற்குப் பகுதிகளிலிருந்து மத்தியக்கிழக்கு அரபிக்கடல் வழியாக கடலோர கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!
இதன் காரணமாக, தமிழகத்தின் அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




