கள்ளக்குறிச்சியில் பெண் மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் காவல்துறையிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்ததைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை மூத்த காவல்துறை அதிகாரியின் கண்காணிப்பில் நடத்த வேண்டும் என்றும், யாருக்கும் சாதகமாக விசாரணை அமையக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
இதையடுத்து, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். காவல்துறை ஐ.ஜி காமினி விசாரணையை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷுக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு காவல்துறையினர் சம்மன் வழங்கியிருந்தனர். புகார் அளித்த பெண் அதிகாரியிடமும் விசாரணை நடத்தப்பட்டதுடன், அவர் நீதிபதி முன்னிலையில் ரகசிய வாக்குமூலமும் அளித்திருந்தார்.
இதனைதொடர்ந்து, 5 மணி நேரம் விசாரணைக்குப் பிறகு கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி பானுமதி முன்னிலையில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷூக்கு 15 நாட்கள் அதாவது டிசம்பர் 11-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.




