அமெரிக்காவின் லூயிஸ்டன் நகரில் நடந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடும் அதிர்ச்சிக்குள்ளான அப்பகுதி மக்கள் 2வது நாளையும் பூட்டிய வீடுகளுக்குள்கழிக்கும் நிலை ஏற்பட்டது.
அமெரிக்காவில் மைனே மாநிலத்தின் லூயிஸ்டன் நகரில் 3 இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்தன. இந்த தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாகவும், 50-60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அக்டோபர் 25-ம் தேதி இரவு நடந்தது. சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் தலைமறைவானார்.
இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை லூயிஸ்டன் காவல்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். சந்தேகத்திற்குரிய அந்த நபர்களின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் அவர் அரை தானியங்கி துப்பாக்கியை கையில் பிடித்துள்ளார். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட தாக்குதல் நடத்தியவர் ராபர்ட் கார்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் சுமார் 20 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியவர்.
லூயிஸ்டன் மாநில காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபரின் புகைப்படங்களை வெளியிட்டதோடு தயவு செய்து கதவுகளை மூடிக்கொண்டு உங்கள் வீட்டிற்குள்ளேயே இருங்கள் என்று பேஸ்புக்கில் ஒரு பதிவின் மூலம் மக்களுக்குத் தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்கிடமான செயல்பாடு அல்லது நபரை நீங்கள் கண்டால், 911ஐ அழைப்பதன் மூலம் எங்களுக்குத் தெரிவிக்கலாம் எனவும் அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







