சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “நேற்று முன்தினம் (27-10-26) மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர புயல் (அர்னாப்) (Very Severe Cyclonic Storm) வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று (28-10-26) அதிகாலை 02.00 மணி முதல் காலை 08.00 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஏனாம் (Yanam) கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா (Bapatla) மற்றும் விசாகப்பட்டினம் (Visakhapatnam) இடையே கரையை கடந்தது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவிழந்து தீவிர புயலாக (அர்னாப்) (Severe Cyclonic Storm) காலை 08.30 மணி அளவில் ஆந்திரப்பிரதேசம், ஏனாம் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும்.
சுமார் 5.8 கிமீ உயரம் வரை தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் உருவாகக்கூடும்.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




