சிறுபான்மையினருக்கு கடன் உதவி – தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டு கழகத்திற்கு முதல் பரிசு!

சிறுபான்மையினருக்கு கடன் உதவி வழங்கி சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டு கழகத்திற்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறுபான்மையினருக்கு கடன் உதவி வழங்கி, அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தென்மண்டல அளவில் சிறப்பாக செயல்பட்டமைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) தமிழ்நாட்டில் வசிக்கும் சிறுபான்மையினரான இஸ்லாமியர், கிறித்தவர். சீக்கியர். புத்தமதத்தவர், பார்சி மற்றும் ஜெயின் ஆகியோர் பயன் பெறும் வகையில், சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்குக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கி வருகிறது.

தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக்கழகத்தின் (NMDFC) முகவர்களாக செயல்பட்டு வரும் தென்மண்டல மாநிலங்களுக்கான மண்டல ஆய்வுக் கூட்டம் 09.10.2026 அன்று ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் நடைபெற்றது. இம்மண்டல ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் மாநில முகமையாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்திற்கு தென்மண்டல அளவில் 2025-2026-ஆம் ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்டமைக்கு முதல் பரிசு பாராட்டுச் சான்றிதழ் / கேடயம் தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் தலைவர் (ம) மேலாண்மை இயக்குநர் அவர்களால் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) தென்மண்டல அளவில் 2025-2026 ஆண்டில் சிறப்பாக செயல்பட்டமைக்கு முதல் பரிசு பெற்றமைக்கு மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அவர்களால் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது”. இவ்வாறு தஹில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.