இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று முன் தினம் (25-10-26) மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, 11:30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதிகளில் நிலவியது. இது மேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை (26.10.2026) 05:30 மணி அளவில் மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக (அர்னாப்) வலுப்பெற்று, 08:30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று நள்ளிரவுக்குள் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாகவும், இன்று (27-10-26) மிக தீவிர புயலாக அதே பகுதிகளில் வலுப்பெறக்கூடும். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே யானம் பகுதிகளுக்கு அருகில் மிக தீவிர புயலாக கரையை கடக்கக்கூடும். நேற்று முன் தினம் (25-10-26) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று (26-10-26) காலை 05:30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கடலோர தமிழக பகுதிகளுக்கு நகர்ந்து, 08:30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது.

சுமார் 3.1 கிமீ உயரம் வரை லட்சத்தீவு பகுதியிலிருந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கடலோர தமிழக பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் வரை தெற்கு கேரளா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணாமாக, தமிழ்நாட்டில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.