ஓய்வுபெற்ற ஃபெடரருக்காக நடால் கண்கலங்கிய புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
டென்னிஸ் உலகின் ஜாம்பவானான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெரடரர், லாவர் கோப்பை டென்னிஸ் போட்டியுடன் ஓய்வு பெற்றார்.
அவர் தனது கடைசி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலுடன் இணைந்து இரட்டையர் ஆட்டத்தில் விளையாடினார். இந்த ஆட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், ஃபெடரர் இணை, எதிரணியிடம் தோல்வியைத் தழுவியது. ஆட்டம் முடிந்த பிறகு, அரங்கத்தில் அமர்ந்திருந்தபோது ஃபெடரர் இந்த ஆட்டத்திற்கு பிறகு விளையாடப் போவதில்லை என்பதால் கண்கலங்கினார்.
இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. பெடரரும் கண்கலங்கினார். இவர் இருவருமே எதிரெதிராக 40 ஆட்டங்களில் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடால் 22 முறையும், ஃபெடரர் 20 தடவையும் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றனர். எதிரெதிர் துருவங்களாக இருந்தபோதிலும் இருவரும் கண் கலங்கியதை கண்ட டென்னிஸ் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர். 
இந்தப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பகிர்ந்தார்.
அத்துடன் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
எதிரெதிர் துருவங்களாக இருந்த இருவரும் இப்படி சோகத்தில் இருப்பார்கள் என்று யார் நினைத்திருப்பார்கள்? இதுதான் விளையாட்டின் அழகு. இதுதான் எனக்கு கிடைத்த மிக அழகான விளையாட்டுப் புகைப்படம். எப்போது உங்கள் தோழர் உங்களுக்கு கண்ணீர் விடுகிறாரோ அப்போதுதான் உங்களுக்கு கடவுள் அளித்து இருக்கும் திறமையை வைத்து என்ன செய்திருக்கிறீர்கள் என்று தெரியும். வேறு எதுவுமில்லை, இவர்கள் இருவரையும் மதிக்கிறேன் என்று விராட் கோலி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஃபெடரரின் ஓய்வுடன் வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதி வெளியேறியதாக கருதுகிறேன் என்று நடால் தெரிவித்தார். 
“எங்கள் விளையாட்டின் வரலாற்றின் இந்த அற்புதமான தருணத்தின் ஒரு பகுதியாக இருப்பதை நினைத்து நான் கெளரவமாக கருதுகிறேன். அதே நேரத்தில் பல ஆண்டுகள் ஒன்றாக நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டோம்” என்று நடால் கூறினார்.







