கல்லூரி மாணவியருக்கு ஊக்கத் தொகையாக ரூ.1,000 வழங்கும் திட்டம் ஜூலை 15 முதல் செயல்பாட்டுக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து விட்டு, தற்போது உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு, கல்வி உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் வரும் கல்வியாண்டு ( 2022-2023 ) முதல் அமல்படுத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அண்மையில் அறிவித்த நிலையில், எந்த தேதியில் திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்பது குறித்து பரவலாக கேள்வி எழுந்தது.
இதனிடையே கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வரும், காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதி சுமார் 6 லட்சம் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கலை & அறிவியல், பொறியியல், வேளாண்மை, சட்டம், மருத்துவம், கால்நடை உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் பயிலும் மாணவியரின் வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட விவரங்கள் திரட்டப்பட்டு, உயர்கல்வி உறுதித் தொகையான ரூ.1,000 மாதந்தோறும் வங்கிக் கணக்குக்கே நேரடியாக அனுப்பி வைக்கப்பட ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக உயர்கல்வித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Advertisement: