மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியின் போது, மண்வெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம் செழித்து விளங்கி உள்ளது உறுதி படுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில், மத்திய தொல்லியல் துறை சார்பில், அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. அகழாய்வுப் பணிக்காக 3 இடங்களில் 32 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அங்கிருந்து 62-க்கும் மேற்பட்டமுதுமக்கள் தாழிகள் எடுக்கப்பட்டுள்ளன. குடுவைகள், பானைகள், இரும்பு பொருட்கள், மணிகள் என ஏராளமான தொல்லியல் பொருட்கள் அகழாய்வு பணியின் போது கிடைத்துள்ளன. மேலும் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 2 நாணயங்கள் உட்பட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அகழாய்வு நடைபெறும் 3 பகுதிகளில் ஒரு இடம் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள இடத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரிய முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது. இது 1902-ம் ஆண்டு அலெக்சாண்டர் ரியா என்ற ஆங்கிலேயர் அகழாய்வு செய்த இடத்தின் அருகே கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக பல்வேறு பழங்கால பொருட்கள் அகழாய்வு பணியின் போது கண்டெடுக்கப்பட்டு வருகிறது. இன்றைய காலத்தில் நாம் பயன்படுத்தும் ஒரு சில பொருட்களும், ஆதி தமிழன் பயன்படுத்தியுள்ளான் என்பதற்கு சான்றாக விளங்குகிறது. இந்நிலையில், தொல்லியல் துறை நடத்தி வரும் ஆய்வில் தற்போது மண்வெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத்திய தொல்லியல் துறை அகழாய்வு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், பழங்கால பானையுடன் மண்வெட்டி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்போதைய தமிழர்களும் மண்வெட்டி பயன்படுத்தி உள்ளது தெரிகிறது. பொதுவாக விவசாய நிலங்களுக்கும், விவசாய பணிகளுக்குமே மண்வெட்டி பெரும் அளவு தேவைப்படும் என்பதால், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் விவசாயத்தில் செழித்து விளங்கி உள்ளான் என்பதை உறுதிபடுத்தும் விதமாக மண்வெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Advertisement: