மதுரையில் ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், விபத்து எப்போது நடந்தது என்ற விவரத்தை தற்போது பார்க்கலாம்…
ஆகஸ்ட் 17-ம் தேதி உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பயணிகள், லக்னோவில் இருந்து ஆன்மீக பயணத்தை தொடங்கினர். ஆன்மீக சுற்றுலாவுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு பெட்டியில் 63 பேர் பயணித்துள்ளனர்.
சிறப்பு பெட்டி ஒவ்வொரு ரயிலிலும் கடைசி பெட்டியாக இணைக்கப்பட்டு பயணித்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து புனலூர் – மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைக்கப்பட்ட சிறப்பு பெட்டி, ஆகஸ்ட் 26-ம் தேதி அதிகாலை 3.47 மணிக்கு மதுரை வந்தடைந்தது.
மதுரையில் சிறப்பு பெட்டி அனந்தபுரி விரைவு ரயிலில் இணைப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதிகாலை 5.15 மணி அளவில் ரயில் பெட்டியில், பயணிகள் தேநீர் போடுவதற்காக சமையல் சிலிண்டரை பற்ற வைத்தபோது தீ விபத்து ஏற்பட்டது.
5.45 மணிக்கு தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க தொடங்கினர். 7.15 மணிக்கு ரயில் பெட்டியில் பற்றிய தீ, முழுமையாக அணைக்கப்பட்டது.
பயணிகள், நாளை கொல்லம் – சென்னை எழும்பூர் அனந்தபுரி விரைவு ரயிலில் சென்னை செல்ல இருந்தனர். சென்னையில் இருந்து மீண்டும் லக்னோ திரும்பவும் பயணிகள் திட்டமிட்டிருந்தனர்.







