“கோதுமையை முறையாக ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யவில்லை” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

கோதுமை ரேஷன் கடைகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்ய திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாட்டில் உள்ள 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று செய்திகள் வருகின்றன. இம்மாத்திற்கு 8,722 டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தும், அதை முறையாக ரேஷன் கடைகளுக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு விநியோகம் செய்யவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே துவரம் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்ட போதே, இந்த அரசை எச்சரித்தும், மிகுந்த மெத்தனப் போக்குடன் தான் செயல்பட்டது. திமுக ஆட்சியில் மற்ற துறைகளைக் காட்டிலும், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது போலும்.

நெல் கொள்முதல் முதல், கோதுமை விநியோகம் வரை அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் கூட Total Failure ஆக இருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக கோதுமை ரேஷன் கடைகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.