தொழில்நுட்ப சேவையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாட்ஸ்-அப் செயலி திடீரென முடங்கியது. இதனால் பயனாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தகவல் பரிமாற்றத்தில் மக்கள் மத்தியில் வாட்ஸ்அப் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. புகைப்படங்கள், வீடியோ, மற்றும் குறுஞ்செய்திகள் என வாட்ஸ்-அப் பயனாளர்கள் நாளுக்கு நாள் பெருகி கொண்டே செல்கின்றனர்.
இந்நிலையில், தற்போது வாட்ஸ்-அப் செயலி திடீரென முடங்கியது. கடந்த 30 நிமிடங்களுக்கு மேலாக வாட்ஸ்-அப் பயன்பாட்டில் இல்லை. இதனால் தகவல்களை பரிமாற்றம் செய்யமுடியாமல், வாட்ஸ்-அப் பயனாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். வாட்ஸ்-அப் நிறுவனத்தின் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் வாட்ஸ்-அப் சேவை முடங்கியதால், பயனாளர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் டெலிகிராம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக பயனாளர்கள் தகவலை பரிமாறி வருகின்றனர். வாட்ஸ்-அப் சேவை எப்போது சரி செய்யப்படும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். உடனடியாக தொழிலுநுட்ப கோளாறை சரி செய்து மீண்டும் வாட்ஸ்-அப் சேவையை தடையின்றி கிடைக்க வாட்ஸ்-அப் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே நேரத்தில் வாட்ஸ்-அப் சேவை முடங்கியதும், நெட்டிசன்கள் டிவிட்டரில் ‘வாட்ஸ்-அப் டவுன்’ என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்டுள்ளனர். இதை பலரும் பகிர்ந்து வருவால் வாட்ஸ்-அப் சேவை முடக்கத்திற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளதை பார்க்கமுடிகிறது. இதனிடையே, மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். அதில், வாட்ஸ்-அப் முடங்கியுள்ளதை அறிவோம் என்றும் விரைவில் அதனை மீட்டெடுக்க பணியாற்றி வருவதாகவும் விளக்கமளித்துள்ளார்.
-இரா.நம்பிராஜன்








