புளூ ஸ்டார் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில் பேசிய அப்படத்தின் நடிகை கீர்த்தி பாண்டியன் அரசியல் பேசினால் என்ன தவறு என பேசியுள்ளார்.
இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் புளூ ஸ்டார். இதனை நீலம் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கிரிக்கெட்டை மையப்படுத்தி தயாரான இப்படத்தின் அறிமுக விடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து, அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியனின் திருமணத்தை முன்னிட்டு ‘ரயிலின் ஒலிகள்’ பாடலைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இப்பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் அசோக் செல்வன், ஷாந்தனு பாக்யராஜ், நடிகை கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கீர்த்தி பாண்டியன் பேசியதாவது..
” பா.ரஞ்சித் பற்றி அனைவரும் விமர்சனங்களை முன் வைக்கின்றனர். அரசியல் பேசுகிறார் என விமர்சனங்களை வைக்கின்றனர். சினிமாவில் அரசியல் பேசினால் என்ன தவறு? நமது சூழல், வாழ்வியல் அனைத்திலும் அரசியலோடு ஒன்றிப்போய் உள்ளது. நாம் உடுத்தும் துணி முதல் குடிக்கும் தண்ணீர் வரை அரசியல் உள்ளது” என கீர்த்தி பாண்டியன் பேசினார்.







