எந்த துறையாக இருந்தாலும் அதன் முக்கியத்துவம் அறிந்து செயல்படுவேன் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் கடந்த 2ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், அமைச்சரவை மாற்றம் பற்றியும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து புதிய அமைச்சரவையில் மன்னார்குடி எம்.எல்.ஏ டிஆர்பி ராஜா இடம்பெறுவார் எனவும், சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டது. பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் ஆவடி நாசரை விடுவித்து, நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி தொகுதியின் எம்.எல்.ஏ-வும் ஆன டி.ஆர்.பி.ராஜாவை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார்.
அதன்படி இன்று காலை 10.30 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து, புதிய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட இலாக்காக்கள் குறித்து ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டது. அதில் தகவல் தொழிநுட்பத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜிற்கு பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் நியூஸ் 7 தமிழுக்கு அளித்திருந்த பேட்டியில்,
தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய வெளிச்சத்தை எடுத்து வந்துள்ளேன். முதல்வர் என்மீது நம்பிக்கை வைத்து தற்போது பால்வளதுறையை என்னிடம் ஒப்படைத்துள்ளார். அதில் உள்ள சவால்களை எளிதாக எதிர்கொள்வேன். இலாக்கா மாற்றம் செய்ததில் எனக்கு எந்தவித கடினமும் இல்லை. எனக்கு பால்வளதுறையை ஒதுக்கீடு செய்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது. எந்த துறையாக இருந்தாலும் அதன் முக்கியத்துவம் அறிந்து செயல்படுவேன் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா