12-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 600/600 மதிப்பெண் பெற்ற சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து கூறி தங்க பேனா பரிசளித்தார்.
திண்டுக்கல் அண்ணாமலையார் பள்ளியில் பயின்ற தச்சுத் தொழிலாளியின் மகள்
நந்தினி 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600/600 மதிப்பெற்று சாதனை படைத்த நிலையில் ,பல தரப்பிலிருந்தும் அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரிய சாமி உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து மாணவியின் சாதனையை பாராட்டும் விதமாக கவிஞர் வைரமுத்து “எனக்களித்த தங்கப் பேனாவை வீட்டிற்கே சென்று மாணவிக்கு வழங்குகிறேன்” என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்தார் .
இந்நிலையில் இன்று திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் உள்ள மாணவியின்
வீட்டிற்கு சென்ற கவிப்பேரரசு வைரமுத்து மாணவி நத்தினி மற்றும் அவரது
பெற்றோரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் . மேலும் தான் வைத்திருத்த
தங்கப் பேனாவை மாணவிக்கு பரிசளித்து வாழ்த்து கூறினார்.பின்னர் வெற்றி பெற்றது குறித்து மாணவியிடம் விசாரித்தார்.
இதனையடுத்து மாணவி நந்தினியுடன் கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசியதாவது
600/600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு அவரது சாதனையை பாராட்டி தங்க பேனா வழங்கியுள்ளேன். மனதில் லட்சிய நோக்கத்தை கொண்டு செயல்பட்டால் நந்தினி போல் சாதனை படைக்கலாம் . நந்தினியையும் அவரது ஆசிரியர்களையும் பாராட்டுகிறேன்; பெண்மையை போற்றுகிறேன். கல்விக்கும் செல்வத்திற்கும் சம்மந்தம் இல்லை என்று நிருபித்துள்ளார் நந்தினி.
சிறிய வீட்டில் பயின்ற மாணவி சாதனை படைத்துள்ளார். இந்த பேனா நந்தினிக்கு மட்டுமல்ல அனைத்து வெற்றி பெற்ற பெண்களுக்கும்; வெற்றி பெற்றவர்களை மட்டுமல்லாது தோல்வியுற்றவர்களையும் நாம் பார்க்க வேண்டும். தோல்வி உற்றவர்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டும். தோல்வியுற்று மறு தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கும் பரிசளிக்க உள்ளேன்.
இவ்வாறு கவிப்பேரசு வைரமுத்து தெரிவித்தார்.
பின்னர் மாணவி நந்தினி, கவிப்பேரரசு வைரமுத்துக்கு கவிதை மூலமாக நன்றி தெரிவித்தார். இதனையடுத்து அண்ணா மலையார் பள்ளிக்கு வந்த வைரமுத்து பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்த பின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.







