சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றது தனக்கு பெருமையான தருணம். அதே நேரத்தில் மிகப்பெரிய பொறுப்பையும் உணர்ந்து செயல்பட வேண்டி உள்ளது. தமிழக வெற்றி கழகம் காங்கிரஸ் கூட்டணியின் முதல் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் செயல்பட உள்ளேன். சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் தேசிய கட்சி ஆட்சியில் பங்கேற்று இருப்பது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய பாஜக அரசு கொண்டு வரவுள்ள தொகுதி மறு வரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா உள்ளிட்டவை தமிழ்நாட்டின் உரிமைகளையும் மாநில சுய ஆட்சியும் பாதிக்கும் வகையில் இருக்கிறது. இத்தகைய மசோதாவுக்கு தீவிரமாகவும் துணிச்சலுடனும் எதிர்ப்பு தெரிவிப்பேன். நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரலாக ஒளிப்பேன். தன்னை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேகத்தாது அணைத் திட்டத்தை தமிழக காங்கிரஸ் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவகுமாரை நேரில் சந்தித்து தமிழக காங்கிரஸின் எதிர்ப்பை தெரிவித்துள்ளோம். இது இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சனை என்பதால் தேசிய கட்சியாக அரசியல் ரீதியாக தீர்வு காணும் வலிமையும் நம்பிக்கையையும் காங்கிரசுக்கு இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகமும், காங்கிரஸும் மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக உள்ளன.
திமுக தனித்து நிற்பதோ கூட்டணி கட்சிகளுடன் நிற்பது அவர்களின் உட்கட்சி விவகாரம் கூட்டணி ஆட்சியை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என அவர்கள் கூறியதை தவறு என நிரூபித்து விட்டோம். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு ஒரு புத்துணர்ச்சியும், உற்சாகமும் பல ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்துள்ளது. கூட்டணி ஆட்சியில் மரியாதையும் மதிப்பும் இருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் எனது நண்பர் மாணிக்கம் தாகூருக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாணிக்கம் தாகூர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை புதிய திசையில் மேலும் வலுப்பெறும் வகையில் கொண்டு செல்வார் தமிழக மக்களின் குரலாக காங்கிரஸ் செயல்படும். நாங்கள் யாருக்கும் அடிமை கிடையாது எங்களின் பொறுப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமே. மாணிக்கம் தாகூரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்ட முடிவு காங்கிரஸ் கட்சியின் தலைவர் எடுத்த முடிவு, தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதை நாங்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வோம்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பெண்கள் பாதுகாப்பு போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எழுப்பிய கேள்விக்கு, புதிய அரசு பொறுப்பு ஏற்று ஒரு மாதம் தான் ஆகிறது பெண்களுக்காக சிங்கப்பெண் திட்டம் வரவேற்கத்தக்க முயற்சி ஒரு மாதத்திலேயே ஆட்சி ஊழலற்ற ஆட்சி என்ற நம்பிக்கை மக்களிடையே அரசு ஏற்படுத்தி உள்ளது.
புதிதாக அமைந்துள்ள தமிழ்நாடு அரசுக்கு சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டும். சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. விரைவில் முன்னேற்றம் காணப்படும். முந்தைய ஆட்சியுடன் ஒப்பிடுகையில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளதாக கூற முடியாது ஒரு மாத காலத்தில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன மேலும் முன்னேற்றம் ஏற்படும்.
திமுக தலைவர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அதனை அரசியல் பழிவாங்கல் என்றுதான் அவர்கள் கூறுவார்கள். கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியை மக்கள் ஏற்க மறுத்து தேர்தலில் நிராகரித்து அவர்களை வீட்டில் அமர வைத்து விட்டனர்” இவ்வாறு கூறினார்




