மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் 4 மாடி கட்டடம் இடிந்ததில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
மும்பையின் குர்லா பகுதியில் இருந்த பழமையான 4 மாடி கட்டடம் நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் 20க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர்.
கட்டடம் இடிந்து விழுந்த தகவல் கிடைத்ததும், காவல்துறையினரும், தீ அணைப்பு மற்றும் மீட்புப் படையினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இடிந்து விழுந்த கட்டடம் தொடர்பாக அதன் உரிமையாளருக்கு கடந்த 2003ல் இருந்து மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி வந்ததாகத் தெரிவித்த இணை ஆணையர் அஷ்வினி பிடி, கட்டடத்தை சரி செய்ய வேண்டும் என்றும், காலி செய்ய வேண்டும் என்றும் பின்னர் இடித்துவிட வேண்டும் என்றும் பல்வேறு காலகட்டங்களில் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டதாகக் கூறினார்.
எனினும், கட்டடத்தை சரி செய்யும் பணிகூட மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மாநகராட்சியின் தொடர் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் அலட்சியம் காட்டப்பட்டதே விபத்துக்குக் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சம்பவ இடத்துக்கு வந்த மகாராஷ்ட்ர சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த மாதத்தில் நடந்த 3வது கட்டட விபத்து இது என தெரிவித்துள்ள மும்பை மாநகராட்சி, கடந்த 9ம் தேதி பந்தரா பகுதியில் 3 மாடி கட்டடம் ஒன்றும், கடந்த 23ம் தேதி மும்பையின் செம்பூர் பகுதயில் 2 மாடி கட்டடம் ஒன்றும் இடிந்து விழுந்ததாகத் தெரிவித்துள்ளது.










