ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை அந்த மாநில போலீசார் இன்று காலை கைது செய்தனர். அதற்கான காரணங்கள் என்ன என்பதை விரிவாக காணலாம்….
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவருமான சந்திரபாபு நாயுடு, திறன் மேம்பாட்டுத் திட்ட முறைகேடு வழக்கில் ஆந்திர மாநில குற்றப் புலனாய்வுத் துறையினரால் இன்று காலை கைது செய்யப்பட்டார். எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் சந்திரபாபுவை எப்படி கைது செய்யலாம் என்று அவரது வழக்கறிஞர்கள் போலீசாரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது அனைத்து விவரங்களையும் தெரிவிப்பதாக சந்திரபாபுவிடம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆந்திராவில் சந்திரபாபு ஆட்சியில் இருந்தபோது இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் வகையில் ரூ 3,300 கோடி திட்டத்துக்கு 2015-ம் ஆண்டு மாநில அரசு ஒப்பந்தம் செய்தது. இதற்காக ஜெர்மனை சேர்ந்த சீமென் என்ற நிறுவனம் மற்றும் டிசைன் டெக் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.சீமென்ஸ் இண்டஸ்ட்ரி சாப்ட்வேர் இந்தியா திறன் மேம்பாட்டிற்காக 6 சிறந்த மையங்களை நிறுவும் பணியை மேற்கொள்ளும் எனவும், இந்த திட்டத்தில் மாநில அரசு 10% பங்கை செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும் சீமென்ஸ் மற்றும் டிசைன் டெக் நிறுவனம் மீதமுள்ள நிதியை மானியமாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மாநில அரசின் பங்குத் தொகையில் ரூ.371 கோடி முறைகேடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலி ரசீது மற்றும் இன்வாய்ஸ்கள் மூலம் ஜிஎஸ்டி வரியை ஏமாற்றியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனிடையே, ஆந்திர மாநில திறன் மேம்பாட்டு வழக்கில் முறைகேடுகள் நடந்துள்ளதாக திறன் மேம்பாட்டுக் கழகத் தலைவர் கோண்டுரு அஜய் ரெட்டி ஆந்திர சிஐடி போலீசில் புகார் அளித்தார்.
இதனையடுத்து திறன் மேம்பாட்டு கழக முன்னாள் தலைவர் இயக்குநர் உட்பட பலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல் சந்திரபாபு நாயுடு, ஐபிசி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிற பிரிவுகளின் கீழ் 120(8), 166, 167, 418, 420, 465, 468, 471, 409, 201, 109 r/w 34 & 37 ஜாமீனில் வெளிவர முடியாத குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.