சென்னை பெருநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ள சந்தீப் ராய் ரத்தோர் கடந்த வந்த பாதை குறித்து பார்க்கலாம்.
1992-ம் ஆண்டு பேட்ச் தமிழக கேடர் அதிகாரியான சந்தீப் ராய் ரத்தோர் பி.ஏ. புவியியல் இளநிலை பட்ட படிப்பை முடித்து எம்.ஏ. போலீஸ் சயன்ஸ் மற்றும் கிரிமினாலஜி பட்டம், பொது நிர்வாக பிரிவில் எம்.பி.எல்., எம்.ஏ இயற்கை பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் நிர்வாக பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றவர்
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவை மாநகரில் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தின் போது துணை ஆணையராக பணியாற்றியவர் சந்தீப் ராய் ரத்தோர். 1999 ஆம் ஆண்டு திகார் சிறையில் உள்ள தமிழ்நாடு சிறப்புபிரிவு கமாண்டண்ட்டாகவும், 2000-ம் ஆண்டு சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையராகவும் பதவி வகித்தார். 2002-ம் ஆண்டு சிபிசிஐடி எஸ்.பி.யாகவும்,, 2005ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார். 2007ம் ஆண்டு சென்னை மாநகர மத்திய மண்டல இணை ஆணையராக பதவி உயர்வு பெற்றார்.
2010ம் ஆண்டு மத்திய அரசு பணியாக சிஐஎஸ்எஃப் டிஐஜியாக பணியிட மாற்றம் பெற்றார். 2015ம் ஆண்டு தேசிய பேரிடர் மீட்பு பிரிவு ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றார். 2016ஆம் ஆண்டு தமிழக கடலோர பாதுகாப்பு குழும ஐ.ஜி.யாகவும், 2017-ம் ஆண்டு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று சிறப்பு அதிரடிப்படை பிரிவிலும் பணியாற்றினார். சிறப்பு அதிரடிப்படையில் இவர் பணியாற்றியபோது நக்சலைட் தடுப்பு பணி மற்றும் கேரளா, கர்நாடகா, தமிழக வனத்துறை பகுதிக்குள் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினார்.
2019ஆம் ஆண்டு தமிழ்நாடு காவலர் தேர்வாணையத்தின் கூடுதல் டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் பணியாற்றிய போது 2 ஆண்டுகளில் 11 ஆயிரத்து 813 காவலர்களும், 969 நேரடி உதவி ஆய்வாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர் என்பது காவல்துறையில் பெரும் வரவேற்பை பெற்றது. 2021ஆம் ஆண்டு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபியாகவும், 2022ஆம் ஆண்டு ஆவடி காவல் ஆணையராகவும் பணியாற்றி உள்ளார் சந்தீப் ராய் ரத்தோர்.
இந்நிலையில், தற்போது சென்னை காவல் ஆணையராக சந்தீப் ரத்தோரை நியமித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 109 ஆவது சென்னை காவல் ஆணையராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.