பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கருப்பு உடை அணிந்து வரக்கூடாது என மாவட்ட காவல்துறை கூறியதாக பழி போடும் வகையில் சுற்றறிக்கை வெளியிட்ட நிர்வாகத்திடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த
நிலையில், பல்கலைக்கழக பதிவாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்,
பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வரும் அனைவரும் கருப்பு நிறம் அல்லாத
உடைகளை அணிந்து வரவேண்டும், செல்போன் எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும் என்பதை மாவட்ட காவல் துறையினர் அறிவுறுத்தலின் படி சுற்றறிக்கை வெளியிடப்படுவதாக தெரிவித்திருந்தார்.
இதனால், அதிர்ச்சியடைந்த சேலம் மாவட்ட எஸ்பி சிவகுமார், இதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதேபோன்று சேலம் மாநகர காவல்துறை ஆணையர் விஜயகுமார் தாங்களும் இதுபோன்ற அறிவிப்பு எதுவும் வழங்கவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.
இதனால், அதிர்ச்சியடைந்த பல்கலைக்கழக நிர்வாகம், கருப்பு உடை அணிந்து வரக்கூடாது என்ற சுற்றறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனிடையே பெரியார் பல்கலைக்கழகம், காவல்துறை மீது பழி போடுவதற்கான காரணம் என்னவென்று போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ஆளுநருக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்ற காரணத்தால் இவ்வாறு ஒரு பொய்யான அறிவிப்பை வெளியிட்டு, போலீஸ் மீது பழி போட முயற்சி செய்தனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனிடையே பல்கலைக்கழக தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சக்திவேல், சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில், காவல்துறை மீது பலியை போட்டு பொய்யான அறிக்கையை விட்ட பதிவாளர் தங்கவேல், துணை வேந்தர் ஜெகநாதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.







