பேச மறுத்த காதலியை ஸ்குரூ டிரைவரால் காதலன் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம் கார்பா மாவட்டம் ஜாஷ்பூரை சேர்ந்தவர் தூத்ராம். இவரது 20 வயது மகள் நீல்குஷ், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்து வந்தார். அப்போது பேருந்தின் நடத்துனர் ஷபாஸ்கான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து ஷபாஸ்கான் குஜராத்திற்கு வேலைக்காக சென்றார். பின்னர் காதலி நீல்குஷ்சுடன் பேச ஷபாஸ்கான் முயற்சித்தபோது, நீல்குஷ் போனை எடுக்கவில்லை. இந்நிலையில் நீல்குஷ்சுக்கும், ஜாஷ்பூரை சேர்ந்த வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஷபாஸ்கான் தன் காதலியை சந்திக்க அகமதாபாத்தில் இருந்து ராய்பூருக்கு விமானத்தில் வந்தார். பின்னர் நீல்குஷ் வீட்டிற்கு சென்று அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதால், தான் மறைத்து வைத்திருந்த ஸ்குரூ டிரைவரால் நீல்குஷ் முகம், கழுத்து, முதுகு என உடல் முழுவதும் ஆவேசத்துடன் குத்தி விட்டு தப்பி ஓடினார். இதில் நீல்குஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த நீல்குஷ்ஷின் சகோதரர், கொலை செய்யப்பட்டு கிடந்த தனது தங்கையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நீல்குஷ் அருகே கிடந்த விமான டிக்கெட் மூலம் நீல்குஷ்சை குத்தியது ஷபாஸ்கான் தான் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். தப்பி ஓடிய ஷபாஸ்கானை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். பேச மறுத்ததற்காக ஸ்குரூ டிரைவரால் காதலியை கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.