சிவகங்கை அருகே மாணவர் உயிரிழப்புக்கு காரணமான வாகனம் பள்ளிக்கு சொந்தமானது இல்லை என வட்டார போக்குவரத்து அலுவலர் நியூஸ் 7 தமிழுக்கு தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் பெரியகோட்டை என்னும் இடத்தில் சார்லஸ் மெட்ரிகுலேசன் என்னும் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. சார்லஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் பயிலும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளி வாகனத்தில் வருவது வழக்கம். அந்த வகையில், இன்று காலையில் மாணவர்களை ஏற்றிவந்த வேன், சர்வநேந்தல் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த கண்மாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சம்பவ இடத்திற்கு அருகிலிருந்த பொதுமக்கள் பள்ளி வாகனத்தில் இருந்த மாணவர்களை மீட்டனர். இந்த விபத்தில் முலைக்குளத்தை சேர்ந்த ஹரிவேலன், (வயது 12) என்ற 7ம் வகுப்பு மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.
வாகன விபத்து குறித்து சோதனை மேற்கொண்ட வட்டாரபோக்குவரத்து அலுவலர் (RTO) மூக்கன் நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில் கூறியாதாவது:
விபத்துக்குள்ளான வாகனம் பள்ளிக்குச் சொந்தமானது அல்ல. வாகனத்தின் பதிவு எண் சென்னை உரிமம் பெற்றது. வாடகை அடிப்படையில் பள்ளி நிர்வாகம் வாகனத்தை உபயோகித்துள்ளது. மேலும் மாற்று ஓட்டுநரை வைத்து வேனை இயக்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பள்ளியின் சார்பாக பயன்படுத்தப்படும் எந்தவொரு வாகனமும் போக்குவரத்துத் துறையின் சிறப்பு அனுமதி பெற்றிருக்க வேண்டும். இதன் அடிப்படையில் செயல்படாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த வாகன விபத்து தொடர்பாக சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் அளிக்க உள்ளோம்.
இவ்வாறு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மூக்கன் தெரிவித்தார்.







