அமைச்சர் செந்தில் பாலாஜியின் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் வெங்கடரமணியை தமிழ்நாடு ஆளுநர் சந்தித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல தலைவர்களிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. சபாநாயகர் அப்பாவு அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனவும் அதனை நடைமுறைப்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 7ம் தேதி விமானத்தில் டெல்லிக்கு சென்றார். வரும் 13 ஆம் தேதி வரை டெல்லியில் இருக்கும் அவர், பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்தார். இந்த சந்திப்பில் மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியதாகவும் தகவலகள் வெளியானது. இது குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் ”ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் டெல்லியில் பயனுள்ள சந்திப்பை மேற்கொண்டார் ” என தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பயணத்தின்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்க விவகாரத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்துக் கேட்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியிருந்தார். செந்தில் பாலாஜியின் விவகாரத்தில் மத்திய அரசு தலைமை வழக்கறிஞரிடம் சட்ட ஆலோசனை கேட்பதாக கூறி அந்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட ரமணியை இன்று சந்தித்துள்ளார். இதன் மூலம் தலைமை வழக்கறிஞர் ஆலோசனை நடத்தி, செந்தில் பாலாஜி விவகாரத்தில் முக்கிய முடிவுகளை ஆளுநர் எடுக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.







