பட்டினப்பிரவேசம் என்றால் என்ன? பட்டினப்பிரவேசம் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான சைவ ஆதீனங்களில் ஆண்டுக்கு ஒருமுறை பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சைவ ஆதீனத்திலும், நட்சத்திர நாளில் நடைபெறும் குருபூஜை பெருவிழாவில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் ஆதீனத்தின் கர்த்தராக விளங்குபவரை, குரு முதல்வராக பாவித்து, அவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
மேலும், ஆதீனத்தை குருமூர்த்தியாக கருதி பல்லக்கில் அமரவைத்து ஆதீன மடத்தின் வீதிகளில் சீடர்கள் தூக்கிச்செல்வார்கள். அப்போது, மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது மூப்பு காரணமாக வீட்டிலேயே இருப்பவர்கள் பல்லக்கில் அமர்ந்து வரும் ஆதீன கர்த்தருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடுவார்கள். சுமார் 500 ஆண்டுகளுக்கு மேலாக, தொன்மையான சைவ ஆதீனங்களாக விளங்கிவரும் மதுரை, தருமபுரம், திருவாவடுதுறை உள்ளிட்ட ஆதீன மடங்களில் தற்போது வரை இந்த பட்டினப்பிரவேசம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அண்மைச் செய்தி: ‘12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது’
இந்நிலையில், தருமபுர ஆதீனகர்த்தரை பல்லக்கில் மனிதர்கள் சுமந்து செல்லும் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இதற்கு மதுரை ஆதினம் உள்ளிட்ட ஆதினங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பட்டிண பிரவேசத்தை யாராலும் தடுக்க முடியாது என்றும், இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் ஒரு அமைச்சரும் சாலையில் நடக்க முடியாது என்று மன்னார்குடி ஜீயர் சென்னடலங்கார செண்பக மன்னார் இராமனுஜ ஜீயர் தெரிவித்துள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இதற்கு முன்பாக, சட்டப்பேரவையில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், ‘தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேசம் நடத்துவது தொடர்பாக விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார்’ என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








