OCD-யும் மனஅழுத்தமும் குறித்து மன நல மருத்துவர் ஆனந்த் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் நேற்று காலை துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்டார். நீண்ட காலமாக மன அழுத்தத்தில் இருந்ததால தூக்கம் வராமல் தூக்க மாத்திரை சாப்பிட்டதாகவும், தனிப்பட்ட பிரச்னைகளால் அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தத்திற்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மனநல மருத்துவர் ஆனந்துடன் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் சுகந்தகுமார் நடத்திய கலந்துரையாடலை பார்க்கலாம்…
”OCD என்பது ஒரு செயலை மீண்டும் மீண்டும் செய்ய வைத்து ஒரு குழப்பத்தை
ஏற்படுத்தக் கூடியது. அதாவது வீட்டில் வேலையை செய்துவிட்டு அதனை செய்துவிட்டோமா என்று யோசிக்க வைக்கும். எடுத்துக்காட்டாக வீட்டின் மின் விளக்குகளை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டோமா என்று பலமுறை யோசித்து அதனை சரி பார்ப்பது உள்ளிட்டவை ஆகும்.
OCD என்பது வேறு, மன அழுத்தம் என்பது வேறு. இந்த இரண்டும் ஒன்றாகும் போது தான் தற்கொலை செய்து கொள்ள பலர் முடிவெடுக்கிறார்கள். தற்கொலை செய்து கொள்வதில் இரண்டு வகை உள்ளது, ஒன்று கனநேரத்தில் சட்டென முடிவு எடுப்பது மற்றொன்று யோசித்து முடிவெடுப்பது.
முதல் வகையில் எடுத்துக்காட்டாக துப்பாக்கி இருக்கு உடனே சுட்டுக் கொள்ளலாம் என்பது போல உயிரைமாய்த்துக் கொள்வது. இரண்டாவது வகையில் யோசித்து கடிதம் எழுதி இவ்வாறு சாகலாம் என்று பொறுமையாக முடிவெடுத்து தற்கொலை செய்து கொள்வது
ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கும் போது அவருக்கு ஒருவர் கவுன்சிலிங் கொடுக்கிறார் என்றால் அவரது மனதில் நாம் இன்னும் சரியாகவில்லை நமக்கு பைத்தியக்காரன் என்று பெயர் வந்துவிடும் என்று தோன்றுகிறது. இந்த பயத்தில் அந்த மன அழுத்தம் மேலும் அதிகரிக்கிறது. மன அழுத்தத்திற்கு தேவையான மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வது நல்லது, மேலும் சில உடற் பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். “ என மருத்துவர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.







