மேற்கு வங்க மாநிலத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் ஜூலை 8-ம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டி போட்டு வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறையில் 12 பேர் உயிரிழந்தனர். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க வுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
22 ஜில்லா பரிஷத், 9,730 பஞ்சாயத்து கமிட்டிகள் மற்றும் 63,229 கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடைபெறுகிது. சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் 65,000 துணை ராணுவப் படையினர் மற்றும் மாநில காவல்துறை சார்பில் 70 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். சில இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் அதனை பொருட்படுத்தாமல் வாக்களித்து வருகின்றனர்.சிட்டை ஆரம்ப பள்ளி வாக்குச்சாவடி மையத்திற்குள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வாக்குச்சீட்டுக்கு தீ வைத்து சென்றது. இதனையடுத்து அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல் வாக்குச்சாவடிகளில் மோதல் சம்பவங்கள் நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 90 சதவீத இடங்களில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.






