ராகுல் காந்திக்கு ஏற்பட்ட சம்பவம் நீதித்துறைக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவால் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ப.சிதம்பரம், “தனியார் நிறுவனம் குறித்து ஆதாரங்களுடன் குற்றம்சாட்டி, ராகுல் காந்தி பேசியதை சபைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கியுள்ளார். 1 மாத காலத்திற்குள்ளாக இந்தியாவின் எந்த நீதிமன்றத்தில் எந்த குற்ற வழக்குக்கு உடனடி தீர்ப்பு வந்துள்ளது? பதவி நீக்க உத்தரவு, யார் கையெழுத்திட்டு அமலுக்கு வந்தது?
163 ஆண்டுகளில் இதுவரை இல்லாத வகையில் வாய்மொழி அவதூறுக்கு, 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டது இதுவே முதல்முறை. இன்று ராகுல் காந்திக்கு நேர்ந்தது வேறு எந்த தலைவருக்கும் நாளை நேரலாம். இது சம்பந்தமாக குடியரசு தலைவரை சந்திப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. நீதிபதிகள் தான் முடிவெடுக்க வேண்டும்.
பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்து ஏற்கனவே பாஜக தெளிவாக கூறியுள்ளது.
அதனை கேட்டதே தவறு என்று குஜராத் அபராதம் விதித்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. அரசியல் காழ்ப்புணர்ச்சி குறித்த போலியான வழக்குகளை நீதிபதிகள் தெரிந்து கொள்ள வேண்டும். ராகுல் காந்திக்கு ஏற்பட்ட சம்பவம் நீதித்துறைக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவால்.
பல பேரிடம் மது அருந்தும் பழக்கம் வந்துவிட்டது. அதனை அரசால் ஒழுங்குபடுத்த மட்டுமே முடியும். தடை செய்வது பல சட்டபிரச்னைகளை ஏற்படுத்திவிடும். தங்கம் விலை உயர்வு, இந்திய பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும். சுங்கச் சாவடி கட்டண உயர்வு, மத்திய அரசின் நிர்வாக கோளாறு என்பதையே காட்டுகிறது. நாடாளுமன்றத்தை முடக்குவது என்பது மிகப்பெரிய விஷயம். அது தற்போது நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.







