”சென்னையால் முடிந்தது ஏன் டெல்லியால் முடியவில்லை” – டெல்லி செஸ் போட்டியிலிருந்து விலகுவதாக கஜகஸ்தான் வீராங்கனை அறிவிப்பு

சென்னையில் ஆயிரம் பேரை வைத்து செஸ் போட்டியை சிறப்பாக நடத்த முடிந்தவர்களால் டெல்லியில் 12பேரை வைத்து நடத்த முடியாதது ஏமாற்றம் அளிக்கிறது என செஸ் போட்டியில் இருந்து விலகிய கஜகஸ்தான் வீராங்கனை ஜெசன்யா தெரிவித்துள்ளார்.…

சென்னையில் ஆயிரம் பேரை வைத்து செஸ் போட்டியை சிறப்பாக நடத்த முடிந்தவர்களால் டெல்லியில் 12பேரை வைத்து நடத்த முடியாதது ஏமாற்றம் அளிக்கிறது என செஸ் போட்டியில் இருந்து விலகிய கஜகஸ்தான் வீராங்கனை ஜெசன்யா தெரிவித்துள்ளார்.

 

டெல்லியில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) சார்பில்  பெண்களுக்கான க்ராண்ட் ப்ரிக்ஸ் 2022-2023  செஸ் போட்டி நடைபெற்று வருகிறது.  இந்த போட்டியில் பங்கேற்க உலகம் முழுவதிலிருந்தும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த போட்டியில்   கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை ஜஸன்யா அப்துல் மாலிக் கலந்து கொள்வதாக இருந்தது. கஜகஸ்தான் நாட்டின் முதல் கிராண்ட் மாஸ்டரான இவர் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் கலந்துகொள்வதற்காக டெல்லி வருகை தந்தார்.

அவருக்கு போட்டி நடத்தும் நிர்வாகம் சார்பாக  முறையான வரவேற்பு மற்றும் தங்கும் இடம் ஒதுக்கப்படவில்லை எனவும்  விமான நிலையத்திலிருந்து அழைத்துச் செல்லக் கூட யாரும் வரவில்லை   என்று கூறப்படுகிறது. இதனால் அவர் தொடரில் பங்கேற்காமல் புறக்கணித்துவிட்டு வெளியேறியதாக  செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இந்த நிலையில் செஸ்  தொடரில் பங்கேற்காமல் கஜகஸ்தான் வீராங்கனை வெளியேறியது குறித்து ஜசன்யா அப்துமாலிக் விளக்கம் அளித்துள்ளார். இதனை செஸ்பேஸ் இந்தியா தனது அதிகாரப்பூர்வ  டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் தெர்வித்துள்ளதாவது..

இந்த செஸ் தொடருக்கான  ஏற்பாடுகள் சரியாக  செய்யப்படவில்லை. இதனால் நான் இந்த செஸ் தொடரில் இருந்து வெளியேறிவிட்டேன். டெல்லி விமான நிலையத்திற்கு  இரவு 1.30 மணிக்கு இறங்கினேன். என்னை அழைத்துச் செல்ல யாரும் வரவில்லை.  என்னை யார் அழைத்துச் செல்ல வேண்டுமோ அவரை தொடர்பு கொள்ள நான் முயற்சி செய்தேன். ஆனால் அவர் ஒரு மணி நேரத்திற்கு மேல் எனது அழைப்புகளை பார்க்கவே இல்லை.

கடந்த ஆண்டு நடைபெற்ற மிகப்பெரிய சென்னை செஸ் ஒலிம்பியாட்டில் ஆயிரம் பேரை ஒன்று சேர்க்க முடிந்தவர்களால் 12 பேரை ஒன்று சேர்ப்பது கடினமில்லை. இது ஒரு நல்ல தொடக்கம் இல்லை. அதேபோல  ஹோட்டல் அமைந்திருந்த இடமும் சரியான இடமாக இல்லை. டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக கடுமையான பிரச்சனை உள்ளது என செஸ் அமைப்புக்குத் தெரியும்.

தினந்தோறும் ஹோட்டலுக்கு வெளியே எதையாவது எரித்துக்கொண்டிருப்பதை பார்த்தேன். ஹோட்டலை விட்டு வெளியே செல்லாதீர்கள் அது ஆபத்தானது என்று ஹோட்டல் பணியாளர் என்னிடம் கூறினார். நான் இந்தியாவை நேசிக்கிறேன். சென்னையில் ஒலிம்பியாட் எங்களுக்குக் கிடைத்தது ஒரு நல்ல வாய்ப்பு. அத்தொடரில் எங்களுக்கு பல நல்ல நினைவுகள் விட்டு சென்றுள்ளன. ஆனால் இந்த முறை தவறு நிகழ்ந்துவிட்டது.

டெல்லியில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்து விளையாட வேண்டும் என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.  பெண்கள் செஸ் போட்டியிலும் செஸ் அமைப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் நல்ல சூழ்நிலையில் விளையாட தகுதியானவர்கள். நான் சிறந்த போராளி என்பதும் நான் இதுபோன்ற தொடரில் இருந்து காரணம் இல்லாமல் வெளியேறமாட்டேன்  என்பது எல்லோருக்கும் தெரியும்” என்று அவர் கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.