தேயிலை குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு என்ன தெரியும் என தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற தேசிய மாணவர் படையின் 75 ஆவது ஆண்டினை கொண்டாடும் வகையில், தனியார் கல்லூரி சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேயிலை பற்றி எதுவுமே தெரியாமல் மேடையில் பேசி வருகிறார். டேன்டீ, இனி வருங்காலத்தில் நஷ்டம் என்பதே இல்லாதவாறு செயல்படுத்தப்பட உள்ளது. அதற்காக தனியார் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். டேன்டீயை பொருத்தவரை ஒருவருக்கு கூட வேலையின்மை என்பதே இல்லாத நிலை உருவாக்கப்படும்.
கூடலூர் அருகே தேவாலா பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் PM2 யானையை பிடிக்க முழு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக 40 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்ட நாளில் இருந்து தற்போது வரை யானையால் எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்” என்றார்.







