புதுச்சேரியில் உள்ள மாற்றத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை 25% உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா தனியார் திருமண நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி
கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு 2022ம் ஆண்டுக்கான மாநில விருதுகளை
வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். சில நேரங்களில் உதவித்தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இனி வரும் காலங்களில் இதுபோன்று இல்லாமல், முதியோருக்கு உரிய நேரத்தில் உதவித்தொகை வழங்குவதுபோல் மாற்றுத்திறனாளிகளுக்கும் உரிய நேரத்தில் உதவித்தொகை வழங்கப்படும். மற்றவர்களுக்கு வழங்குவதைவிட மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 25% உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
வேலைவாய்ப்பில் யுடிசி பணிக்கு ஆட்கள் எடுக்கும்போது, அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% வழங்க வாய்ப்பு இருந்தால் கொடுக்கலாம். ஆனால், ஒரு சில துறையில் 10க்கும் குறைவான பணியிடங்கள் எடுக்கும்போது, அப்பணியில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று இடங்களை கொடுக்க முடியாத நிலை உள்ளது. அதிகமான எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு கொடுக்கும்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு என்ற கோரிக்கையை அரசு நிச்சயமாக கவனத்தில் எடுத்துக்கொள்ளும்” என்று பேசினார்.







