திமுகவில் நடைபெறவுள்ள மாவட்ட செயலாளர் தேர்தலில் இளைஞரணியை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக திமுக மூத்த நிர்வாகிகளிடம் பேசியபோது, திராவிட சித்தாந்தம் மீது இளைஞர்களுக்கு ஈர்ப்பு ஏற்பட வேண்டுமென்றால், இளைஞரணியை வலுப்படுத்த வேண்டும். மேலும், இளைஞரணியில் உள்ள நிர்வாகிகளுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். இதுதொடர்பாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகனிடம் ஆலோசித்ததாக தெரிகிறது. அப்போது அவர் இளைஞரணியினருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
அதே சமயத்தில் கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்தபோது நம்மோடு பயணித்தவர்களை நாம் மறந்துவிடக்கூடாது. அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு நடுவே நமக்கு தோள் கொடுத்தவர்கள். பொருளாதார ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை சந்தித்தவர்கள், அவர்களை நாம் ஆளுங்கட்சியாக இருக்கும்போது கழட்டிவிட்டோம் என்ற அவப்பெயர் ஏற்படும். எனவே மிகவும் மோசமாக செயல்படும் மாவட்டச் செயலாளர்களை மாற்றிவிட்டு அவர்களுக்கு பதிலாக வேண்டுமென்றால் இளைஞரணியினரை கொண்டு வரலாம் எனக் கூறியுள்ளார்.
இதனை பொறுமையாக கேட்டுக்கொண்ட ஸ்டாலின்,
85 முதல் 90 சதவீத நிர்வாகிகள் பழைய ஆட்களாகவே இருக்கட்டும். மிகவும் மோசமாக செயல்படும் 10 முதல் 15 சதவீத நிர்வாகிகளை நாம் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம்
என்ற முடிவிற்கு வந்துள்ளதாக தெரிகிறது.
அதன் அடிப்படையில் திமுக இளைஞரணியில் நன்றாக செயல்படும் நிர்வாகிகள் பட்டியலை உதயநிதி அணியினர் தயாரித்து வருவதாக தெரிகிறது. இந்த பட்டியலை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் ஒப்படைக்கவுள்ளனர். இவர்களில் யாருக்கு மாவட்டச் செயலாளர் வாய்ப்பு வழங்கலாம் என்பதை ஸ்டாலின் முடிவு செய்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இராமானுஜம்.கி








