“கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தி அதிர்ச்சியளிக்கிறது… பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லை” – அண்ணாமலை கண்டனம்!

17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு சமூக வலைத்தளம் மூலம் சில இளைஞர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இளைஞர்கள் குனியமுத்தூரில் உள்ள அறைக்கு வருமாறு சிறுமிக்கு அழைப்பு விடுத்தனர். அங்கு சென்ற சிறுமியை 7 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பததால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பாட்டி உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமி கல்லூரி மாணவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தெரியவந்தது. இதையடுத்து உக்கடம் காவல்துறையினர் கல்லூரி மாணவர்கள் 7 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இச்சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

"Tamil Nadu has become an unsafe state for women" - Annamalai alleges!

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

“கோவையில், 17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பெருகியிருக்கும் போதைப் பொருள்கள் புழக்கத்தால், இளைஞர்கள், விலங்கு மனப்பான்மைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர் என்பதைத்தான் சிறுமிகள் மீதான இது போன்ற கூட்டுப் பாலியல் வன்முறைகள் காட்டுகின்றன.

ஒரு நிர்பயாவுக்காக நாடே அதிர்ந்தது. ஆனால், தமிழ்நாட்டில் தினம் தினம் சிறுமிகள், மாணவிகள், பெண் காவலர்கள், பெண் அரசு அதிகாரிகள் என, பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லை. போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கவோ, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவோ, திமுக அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை. குற்றவாளியை காப்பாற்றுவதற்காகப் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே பழி சுமத்தி விட்டு, வீண் விளம்பரத்துக்காக அப்பா, அண்ணன் என்று நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன்?”

இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.