சென்னையில் ஒரே நேரத்தில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் மற்றும் மெட்ரோ ரயில் பணிகளால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இப்பணிகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்ணா நகர் மண்டலம், வில்லிவாக்கம் திருமங்கலம் சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் மிகவும் மெத்தனமாக நடைபெற்று வருவதாகவும், அதிகாரிகள் ஒருமுறை கூட ஆய்வு மேற்கொள்ளவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இப்பணிகளுக்காக குழிகள் தோண்டப்படும்போது குடிநீர் மற்றும் மின்சார கேபிள்கள் பழுதடைந்ததாகவும், இப்பகுதியில், முறையான தடுப்புகள் அமைக்காததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்பத்தூர் மண்டலம், செந்தில் நகர் சந்திப்பில் நெடுஞ்சாலைத் துறை சார்பாக வெள்ள நீரேற்று நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று மாதமாக இப்பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருவதாகவும், மின்சாரத் துறைக்கு சொந்தமான கேபிள்களை அப்புறப்படுத்தி கொடுக்காததால் இப்பணிகள் தாமதமாகவும் கூறப்படுகிறது. வில்லிவாக்கம் செல்லும் பிரதான சாலையில் இப்பணிகள் நடப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.









