ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்ட போது காயம் அடைந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விரைவில் குணம் அடைய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை 8 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் ஜல்பைகுரியில் இருந்து கொல்கத்தா செல்வதற்காக ஹெலிகாப்டரில் பயணம் செய்த போது, கனமழை காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அப்போது மம்தா பானர்ஜிக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய மம்தா, மருத்துவர்களின் அறிவுறுத்தல் படி ஓய்வு எடுத்து வருகிறார்.






