நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலியை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சென்று நலம் விசாரித்தார்.
முன்னாள் இந்திய அணியின் கேப்டனாகவும் இன்னாள் பிசிசிஐ தலைவராகவும் இருப்பவர் செளரவ் கங்குலி. இவருக்கு இன்று காலை வீட்டில் உடல் பயிற்சி மேற்கொண்டிருந்த போது தீடிரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து செளரவ் கங்குலி கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இதயத்தில் 2 அடைப்புகள் ஏற்படுள்ளதாகவும், அதற்காக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே கங்குலி குணமடைய அவரது ரசிகர்களும் விளையாட்டு வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கங்குலி சிகிச்சைப் பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்ற மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிசிசிஐ தலைவர் கங்குலியை நேரில் சந்தித்தேன், அவர் நலமுடன் உள்ளார், என்னிடம் பேசினார்” அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை மற்றும் மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.







