நாளை கூடுகிறது நாடாளுமன்றம்: மணிப்பூர், ஆளுநர் விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு!

நாளை தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் வன்முறை, மற்றும் மாநில ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்புவோம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆண்டுதோறும்…

நாளை தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் வன்முறை, மற்றும் மாநில ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்புவோம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் நடைபெறுவது வழக்கம். ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடர், ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினத்துக்கு முன்பாக நிறைவுபெறும். அதேபோல் இந்த ஆண்டு நடைபெறும் 17-வது நாடாளுமன்றத்தின் 12-வது (மழைக்காலக் கூட்டம்) அமா்வு நாளை தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தொடா் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் 17 அமா்வுகளுக்கான இந்த கூட்டத் தொடரில் விவாதித்து நிறைவேற்ற மொத்தம் 28 மசோதாக்கள் உத்தேசிக்கப்பட்டுள்ளன. இதில் 21 மசோதாக்கள் இரு அவையிலும் புதிதாத அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

“இந்த ஆண்டு மழைகால கூட்டத்தொடரில் மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்த விரும்புகிறோம். இரண்டாவதாக மாநில ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களை கொண்டு ஜனநாயக முறையில் தேர்தெடுக்கப்பட்ட அரசுகள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்புவோம்.

மேலும் மூன்றாவதாக விலைவாசி உயர்வு, மற்றும் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை குறித்த பிரச்னைகளை எழுப்புவோம். அதேபோல் டெல்லி அவசர சட்டத்தை எதிர்ப்போம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.