இலங்கை அதிபர் ரணில் நாளை இந்தியா வருகை – பிரதமர் மோடிக்கு இலங்கை தமிழர்கள் கடிதம்!

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் 13-ஆவது அரசியல் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்த வேண்டும் என இலங்கை தமிழர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்…

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் 13-ஆவது அரசியல் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்த வேண்டும் என இலங்கை தமிழர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க 2 நாள் அரசுமுறை பயணமாக நாளை (வியாழக்கிழமை) இந்தியா வருகிறார். அப்போது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்திக்கிறார்.

இந்நிலையில், இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்., மாகாண சபை தேர்தல்களை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த இந்திய பிரதமர் இலங்கை அதிபரிடம் வலியுறுத்த வேண்டும் என்று தமிழ் அமைப்பினர், அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் என பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது :

“இலங்கை இறுதிப் போர் முடிந்து 14 ஆண்டுகள் கடந்த விட்டது. ஆனால் தமிழர்களின் சமூக, பொருளாதார நிலை எதிர்பார்த்தபடி முன்னேற்றம் அடையவில்லை. இங்கு அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட வேண்டுமெனில் நிர்வாகத்தில் தமிழர்கள் பங்களிப்பு அவசியம். அது மக்களால் தேர்ந்தெடுத்த அரசால் மட்டுமே சாத்தியமாகும் என பெரும்பாலோர் கருதுகின்றனர்.

அதேபோல, 13-வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்தவும், தமிழ் மாகாணங்களில் மாகாண சபைகளை ஏற்படுத்தவும் இந்திய அரசு முயற்சிப்பதை அறிவோம். எனவே, இதனை இந்தியாவுக்கு வரும் அதிபர் ரணிலிடம், பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்ததை இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் அவர்கள் அளித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.