”தேசிய தேர்வுகள் முகமையின் செயல்பாடுகளை நேரில் ஆய்வு செய்யவுள்ளோம்” – உச்சநீதிமன்றம்!

தேர்வுகளை நடத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள தேசிய தேர்வுகள் முகமை உண்மையில் செயல்படுகின்றதா என்பதை அதன் அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வில் நடைபெறும் தொடர் மோசடிகளுக்கு எதிராகவும், நீட் தேர்வு நடைமுறையை மேம்படுத்தக் கோரியும், கணினி முறையில் தேர்வுகளை நடத்தக்கோரியும் அகில இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக நீட் தேர்வு நடைமுறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தொய்வு இருந்ததை சுட்டி கட்டிய உச்சநீதிமன்றம் தனது அதிருப்தியும் பதிவு செய்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தேர்வுகள் நடைமுறை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்ற நிலை என்ன? என்பது குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தேசிய தேர்வுகள் முகமை என தனி அலுவலகம் அமைக்கப்பட்டு விட்டதாகவும் தேர்வுகள் நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட இன்போசிஸ் நந்தன் நிலேகனி தலைமையிலான குழு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அந்த குழு விரிவான ஆலோசனைகளை நடத்தியுள்ளதாகவும், செப்டம்பர் மாத இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் என தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதிகள், தேசிய தேர்வுகள் முகமை என்ற அமைப்புக்கு தனி அலுவலகம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த அமைப்பு உண்மையில் உள்ளதா? அது செயல்படுகிறதா? இல்லையா? மற்றும் ஊழியர்கள் விவகாரம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் நாங்கள் நேரில் வந்து பார்வையிடுவோம் எனவும், தேசிய தேர்வுகள் முகமைக்கு நிரந்தரப் ஊழியர்கள், சிறப்புத் திறன் கொண்ட பணியாளர்கள், உள்கட்டமைப்பு வசதிகள், நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் தேசிய தேர்வுகள் முகமைக்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் நந்தன் நிலேகனி தலைமையிலான உயர்மட்ட குழுவின் பரிந்துரைகள் வெறும் அறிக்கைகளாக காகித அளவில் மட்டும் நின்றுவிடாமல், நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், ஏனெனில் பரிந்துரைகளை பரிசீலிப்பதும் அவற்றை நடைமுறைப்படுத்துவதுமே மிகவும் முக்கியமானது என அறிவுறுத்தினர். எனவே, இந்த விவகாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்ளும் விதமாக, சீர்திருத்தத்துக்கான நந்தன் நிலேகனி தலைமையிலான உயர்மட்டக் குழுவுடன் ஒருங்கிணைந்து செயல்படும் மத்திய அரசின் இணைச் செயலாளர், அக்குழுவின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை அடங்கிய பிரமாணப் பத்திரத்தைத் இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

அதுபோல, தேர்வுகள் சீர்திருத்தங்கள் மற்றும் முன்னேற்றம் குறித்த விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திர விவரங்களை தேசிய தேர்வுகள் முகமை தனது இணையதளத்தில் வெளியிட வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், எழுத்துப்பூர்வத் தேர்வுகளிலிருந்து டிஜிட்டல் தேர்வுகளுக்கு மாறுவது என்பது படிப்படியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் வழக்கை விசாரணைக்கு எடுப்பதாகக் கூறி 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.