தமிழ்நாட்டை பின்பற்றி மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.
மத்தியப்பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. 230 சட்டசபை தொகுதிகளை உடைய இம்மாநிலத்திற்கு, இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. இதில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைக்க, ஆளும் பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில், எதிர்க்கட்சியான காங்கிரசும் செயல்பட்டு வருகிறது.
காங்கிரஸ் இடம் பெற்று உள்ள INDIA கூட்டணியில் அங்கம் வகிக்கும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியும், மத்தியப் பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவு செய்து, முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளன. இதனால், மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் தற்போதே களைகட்டி உள்ளது. இந்நிலையில், சட்டசபை தேர்தலில், 39 தொகுதிகளில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அண்மையில் ஆளும் பாஜக வெளியிட்டது.
இது குறித்து, மத்தியப்பிரதேச பாஜக மேலிட பொறுப்பாளரும், மத்திய விவசாயத் துறை அமைச்சருமான நரேந்திர சிங் தோமர் கூறுகையில், ”முதற்கட்டமாக, 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். விரைவில், மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்,” என்றார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி அதிரடியாக தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் திமுக அறிவித்த முக்கிய வாக்குறுதிகளை பின்பற்றி பல வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள வாக்குறுதிகள் பின்வருமாறு:
- பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1500
- ரூ.500-க்கு சமையல் எரிவாயு
- 100 யூனிட் மின்சாரம் இலவசம்
- அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம்
- பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு
- ஜாதிவாரி கணக்கெடுப்பு
- விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி
- விவசாயிகளுக்கு 5 HP இலவச மின்சாரம்
ஆகிய வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மகளிருக்கு மாதம் தோறும் உரிமைத் தொகை வழக்கும் வாக்குறுதி திமுக சார்பில் கொடுக்கப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. இதனை பின்பற்றி ஏற்கனவே கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி மகளிர் உரிமைத் தொகை வழக்குவதாக வாக்குறுதி அளித்தது. அதே போல் ஆட்சிக்கு வந்த உடன் அத்திட்டத்தை நடைமுறைக்கும் கொண்டு வந்தனர். இந்நிலையில் தற்போது மத்தியப் பிரதேசத்திலும் காங்கிரஸ் கட்சி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது.







