மேகதாதுவில் கர்நாடக அணை கட்ட தமிழ்நாடு காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது என கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுடொர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கர்நாடகத்தில்,மேகதாதுவில் அணை கட்டுவதாக அந்த மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. சிவகுமார் சொன்ன ஒரு வார்த்தையை வைத்து கொண்டு அண்ணாமலை தேவையற்ற வாதங்களை முன்வைக்கிறார். கர்நாடக அமைச்சர் சொன்னதற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனது கடுமையான மறுப்பை தெரிவித்திருக்கிறார். எந்த காரணத்தை கொண்டும் மேகதாதுவில் அணை கட்ட விட மாட்டோம் என்று அவர் உறுதியாக சொல்கிறார்.
கர்நாடகாவில் பொம்மை அரசாங்கம் இருந்த போது, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் சென்று மேகதாதுவில் அணை கட்டுவதற்கான வரைவுத் திட்;டத்தில் ஒப்புதல் பெற்றவர்கள் பாரதிய ஜனதா கட்சியினர். சட்டப்படி, மரபுப்படி காவிரி நீரை பயன்படுத்துகிற மாநிலங்களின் அனுமதியை பெற்றுத் தான் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் மேகதாது அணை வரைவுத் திட்டத்தை அங்கீகரித்திருக்க வேண்டும். ஆனால், பாரதிய ஜனதா கட்சியினர் டெல்லியிலும், கர்நாடகத்திலும் சேர்ந்து தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் அனுமதியை கேட்காமல் அங்கீகாரம் அளித்தார்கள்.

கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சொல்லிவிட்ட காரணத்தினாலேயே அந்த அணையை கட்டிவிட முடியாது. தமிழ்நாடு அரசும், தமிழக காங்கிரசும் மற்றும் எங்களுடைய கூட்டணி கட்சிகளும், சட்டமும், நீதியும் அதை ஒருபோதும் அனுமதிக்காது.
இவ்வாறு கே.எஸ். அழகிரி குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: