சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்களையும், சென்னையில் மார்ச் 20-ம் தேதி அறிமுகம் செய்யப்போவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நாம் தமிழர் கட்சியின் கோவை மண்டல் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,நாம் தமிழர் கட்சி தனித்து 234 தொகுதிகளிலும் 117 ஆண், 117 பெண் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாகவும் மார்ச் 20 சென்னையில் 234 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்…
இந்திய கட்சிகள், திராவிடக்கட்சிகளுக்கு நாங்கள் தான் வழி நடத்தி வருகிறோம். முதலில் சுற்றுச்சூழலுக்கு என்று பாசறை துவக்கியது நாங்கள் தான். இப்போது தான், 10 ஆண்டுகள் பணி செய்த பிறகு சில கட்சிகள் துவக்குகின்றனர்.இயற்கை வேளாண்மை, ஆடு, மாடு மேய்ப்பது தொடர்பாக பேசியபோது கேலி செய்தார்கள். கர்நாடக காவல்துறை அதிகாரி பதவி விலகி, இங்கு வந்து ஆட்டுக்குட்டியை தோலில் போட்டுக்கொண்டு, இயற்கை வேளாண்மை செய்ய வேண்டும் என ஆடு, மாடு வளர்க்க வேண்டும் என்கிறார்.
வேல் எடுத்து முருகன் நம் முப்பாட்டான் என நான் சொன்னபோது கேலி, கிண்டல் செய்தார்கள். நான் ஆத்மார்த்தமாக நேசித்து உணர்வு பூர்வமாக செய்தேன், அவர்கள் அனைத்தையும் ஓட்டுக்காக தான் செய்கின்றனர். நாங்கள் தான் இவர்களுக்கு வழிகாட்டி என்றும் அவர் பேசினார்.







