ஜாதி பாகுபாடு பார்க்காமல் பணியாற்ற வேண்டும் எனச் சேலம் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களின் நகராட்சி நிர்வாகத் துறையின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே .என்.நேரு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், அதிகாரிகளான உங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல்களில் பெருவாரியான வெற்றியைப் பொதுமக்கள் திமுகவிற்கு வழங்கி உள்ளனர். இதனால், பல்வேறு பணிகள் செய்வதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டு நிதி ஒதுக்கி உள்ளதாகத் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ‘தஞ்சை சரஸ்வதி மஹாலில் இருந்து ஓவியம் திருடப்பட்ட வழக்கில் புதிய திருப்பம்’
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் இந்த துறை சரியாகச் செயல்படவில்லை எனத் தெரிவித்த அவர், அதேகாரணமாகக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஒவ்வொரு பகுதிகளுக்கும் என்னென்ன தேவை எனக் கேட்டறிந்து நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகக் கூறினார். குறிப்பாகச் சாலை வசதி, கழிவுநீர் ஓடை, மழை நீர் கால்வாய் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
ஏரி, குளங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர், அதன் மூலம் நீர்மட்டம் உயரும் என்றும், அனைத்து பகுதிகளிலும் முழு மையான கழிவறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கூறினார். அப்போது, ஜாதி பாகுபாடு பார்க்காமல் பணியாற்ற வேண்டும் எனவும், தேவைகள் என்னவென்று அறிந்து அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், காந்தி, மற்றும், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பணியாற்றும் அதிகாரிகள், பேரூராட்சி தலைவர்கள் நகராட்சி தலைவர்கள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.