வன்முறை சம்பவங்களுக்கு போலி சமூக வலைதள பக்கங்கள் பயன்படுத்துவது தான் காரணமா என பல தரப்பில் இருந்தும் கேள்வி எழுந்துள்ளது.
சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் எதற்காக தொடங்கப்படுகிறது, இதனால் யாருக்கு பாதிப்பு என்பது குறித்த தகவல்கள் இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திலோ அல்லது பயன்பாடற்று புதர்மண்டிக் கிடக்கும் இடத்திலோ குற்ற சம்பவங்கள் நடந்தால் அதனை சமூக விரோதிகளின் கூடாரம் என்று கூறுவது வழக்கம். அப்படிப்பட்ட கூடாரமாக சமூக வலைதளங்கள் மாறி வருகிறதோ என்ற அச்சம் பல தரப்பிலிருந்தும் வலுக்கிறது.
உலகளவில் 150 கோடிக்கும் அதிகமானோர் சமூக வலைதள பக்கங்களை பயன்படுத்துகிறார்கள். இவர்களில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கையே அதிகம். தகவல் பரிமாற்றம், நட்புறவு, ஒன்றிணைத்தல், கருத்துகளை பதிவு செய்தல் போன்ற பயன்பாட்டிற்காக social media உருவாக்கப்பட்டாலும் அதனுடைய நோக்கம் முற்றிலும் மாறி தற்பெருமையை பறைசாற்றும் தளமாகவே மாறிவருகிறது.
நவீன உலகத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என அனைத்திலும் கணக்குகள் வைத்திருந்தாலும் அவர்களை பின்தொடர்வோரின் எண்ணைக்கையை வைத்தே மதிப்பிடப்படுவதாக சொல்லப்படுகிறது. ஃபாலோவர்ஸ்க்காக வலைதள பயன்பாட்டாளர்கள் மேற்கொள்ளும் மெனக்கெடல்கள் அதிகம். இதற்கு பின்னணியில் ஒரு பெரிய வணிகமே மறைமுகமாக செயல்பட்டு வருவதாக சைபர் வல்லுநர்களுடைய கருத்தாக உள்ளது.
இதில் அதிர்ச்சியளிக்கக்கூடிய வகையில் இருக்கும் தகவல் என்னவென்றால் ஒருவர் உருவாக்கிய போலி கணக்கில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலம் அதிக பாலோவர்ஸ்கள் உருவாகுவதாக சைபர் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எண்ணிக்கை அதிகரித்தவுடன் பதிவிட்ட புகைப்படங்களை நீக்கிவிட்டு அதே கணக்கை பெயர் மாற்றம் செய்து தேவைப்படும் நபர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து விடுவதாகவும் அவர்கள் கருத்தை முன்வைக்கின்றனர்.
பாலோவர்ஸ்களின் எண்ணிக்கையை பொறுத்து அவர்களுக்கான ப்ரமோசன்ஸ் மற்றும் வருவாய் ஈட்டும் வகையிலான விளம்பரங்கள் குவிவதாக சைபர் வல்லுநர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். வதந்தியை பரப்பவோ, முக்கிய பிரமுகர்களை இழிவாக பேசவோ, போலி சமூக வலைதள கணக்குகள் கையாளப்படுவதாக குற்றச்சாட்டுகளும் இருக்கிறது.
இதே போலத்தான் கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவத்திற்கு காரணமாக இருப்பது போலி சமூக வலைதள பக்கங்கள் என்ற கருத்தையும் சைபர் க்ரைம் வல்லுநர்கள் முன்வைக்கின்றனர். போலி சமூக வலைதள பக்கங்களை கண்டறிவது என்பது சைபர் க்ரைம் காவல் துறையினரின் பணி என்றாலும் கூட அதனை கண்டறிவது பொதுமக்களுக்கு சுலபமான ஒரு விஷயம் தான் என்கிறார் சைபர் க்ரைம் வழக்குகளை கையாளும் வழக்கறிஞர் கார்த்திகேயன்.
போலி சமூக வலைதள பக்கங்களை கையாண்ட 35 யூடியூப் சேனல்கள், 2 டுவிட்டர் கணக்குகள், 2 இன்ஸ்டாகிராம் பக்கங்கள், ஒரு பேஸ்புக் பக்கத்தை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் முடக்கி நடவடிக்கை எடுத்தது. சைபர் க்ரைம் காவல் துறையினரும் அரசும் நடவடிக்கை எடுத்தாலும் பயணாளர்களுக்கு சமூக பொறுப்பு அவசியமானது என்ற கருத்தை சமூக செயற்பாட்டாளர்கள் முன்வைக்கின்றனர்.









