மத்திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்க 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம் – பிரதமர் மோடி உரை

இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் ஆயிரத்து 470 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து உரையாற்றினார்.   பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2017-ஆம்…

இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் ஆயிரத்து 470 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து உரையாற்றினார்.

 

பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2017-ஆம் ஆண்டு பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 247 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனை, 18 சிறப்பு மற்றும் 17 தனிசிறப்பு பிரிவுகள், 64 தீவிர சிகிச்சை படுக்கைகளுடன் மொத்தம் 750 படுக்கைகள், அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகளை உள்ளடக்கியது.

 

இதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பிரதமர் இன்று மோடி ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய அவர், சிறந்த மருத்துவத்தை தருவதை மட்டுமின்றி சுற்றுச்சூழல் நலனை கருத்தில் கொண்டும் பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

நாட்டின் மூலை பகுதிகளுக்கும் மத்திய அரசின் திட்டங்கள் சென்று சேரும் வகையில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம் என்றார். முந்தைய அரசு இமாச்சலப் பிரதேசத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதே தவிர பிறகு அதனை மறந்துவிட்டதாக குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, 2014-ம் ஆண்டு இமாச்சப்பிரதேசத்தில் வெறும் 3 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்ததாக கூறினார்.

பாஜக ஆட்சியில் 8 மருத்துவக்கல்லூரிகளும், எய்ம்ஸ் மருத்துவமனையும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தற்போது மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் – பிலாஸ்பூர் அமைந்திருக்கிறது என பெருமிதம் தெரிவித்தார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.