மர்ம தேசம், ஜீ பூம்பா தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த லோகேஷின் விபரீத முடிவு

மர்ம தேசம், ஜீ பூம்பா உள்ளிட்ட 90’ஸ் தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துப் பிரபலமடைந்த லோகேஷ் உயிரிழப்பு முயற்சி மேற்கொண்ட நிலையில், நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரபல 90’ஸ் தொடர்களான மர்ம…

மர்ம தேசம், ஜீ பூம்பா உள்ளிட்ட 90’ஸ் தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துப் பிரபலமடைந்த லோகேஷ் உயிரிழப்பு முயற்சி மேற்கொண்ட நிலையில், நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரபல 90’ஸ் தொடர்களான மர்ம தேசம், ஜீ பூம்பா உள்ளிட்டவற்றில் நடித்துப் பிரபலமடைந்தவர் லோகேஷ் ராஜேந்திரன். இவர் நடிப்பைத் தாண்டி திரைப்படங்கள் இயக்குவதில் கொண்ட ஆர்வ மிகுதியால் அது தொடர்பான பணிகளில் ஈடுபட்டு பல்வேறு குறும்படங்களை இயக்கி வந்தார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மயங்கிய நிலையில் கிடந்த லோகேஷை மீட்டு அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லோகேஷை பரிசோதித்ததில் அவர் விஷம் அருந்தி உயிரிழப்பு முயற்சியில் ஈடுபட்டு மயங்கிய நிலையில் இருப்பது தெரியவந்தது.

அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், லோகேஷ் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மருத்துவமனையிலிருந்து  அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் கோயம்பேடு சி.எம்.பி.டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் லோகேஷ் திருமணமாகி விவாகரத்தான நிலையில், காஞ்சிபுரத்தில் தனது தாயுடன் வசித்து வந்ததும், பல்வேறு குடும்ப பிரச்சனையால் லோகேஷ் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலிலிருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

பிரேதப் பரிசோதனைக்காக லோகேஷின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், லோகேஷின் உயிரிழப்புக்கு குடும்ப பிரச்சனை தான் காரணமா? என்பது குறித்து கோயம்பேடு சி.எம்.பி.டி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.