மாணவர்களின் விளையாட்டு திறனைக் கண்டறிய WBTST செயலி – பள்ளிக்கல்வித்துறை

பள்ளி மாணவர்களின் விளையாட்டு ஆர்வம், திறனைக் கண்டறிந்து, அதை மேம்படுத்தும் வகையில் புதிய செயலியை (WBTST) பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களைக்…

பள்ளி மாணவர்களின் விளையாட்டு ஆர்வம், திறனைக் கண்டறிந்து, அதை மேம்படுத்தும் வகையில் புதிய செயலியை (WBTST) பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களைக் கல்வி மட்டுமல்லாது, விளையாட்டிலும் மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில், மாநிலம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உடற்தகுதி எப்படி உள்ளது என்பதைக் கண்டறிந்து, அவர்கள் எந்த விளையாட்டில் ஆர்வமாக உள்ளனர், அந்த விளையாட்டுக்கான பயிற்சியை எப்படி வழங்குவது, பின் அது சார்ந்த போட்டிகளில் எவ்வாறு பங்கெடுக்க வைப்பது? போட்டிகளில் வெற்றி பெற்றால் அடுத்தகட்டமாகப் பங்கேற்க வேண்டிய போட்டிகள் என்னென்ன? தோல்வியுற்றால் என்ன மாதிரியான பயிற்சி வழங்குவது போன்றவற்றை இதுவரை, அந்தந்த பள்ளிகளைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் பதிவேடுகளில் குறிப்பிட்டு வருகின்றனர்.

பள்ளியளவிலான பதிவேடுகளில் மட்டுமே இத்தகைய விவரங்கள் பராமரிக்கப்படுவதால், பள்ளியைத் தாண்டிய கல்வி அலுவலர்களால் அவற்றை அறிந்து, தொடர் நடவடிக்கை & கண்காணிப்பு மேற்கொள்வதில் நடைமுறை சிக்கலும் காணப்படுகிறது. இந்நடைமுறையை மாற்றி, EMIS இணையதளத்துடன் இணைந்து செயல்படும் வகையில் World Beater Talent Spotting Test என்ற புதிய செயலியை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.

WBTST செயலியில் மாணவர்களின் விவரங்களை அந்தந்த பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளீடு செய்வதன் மூலமும், தினந்தோறும் Update செய்வதன் மூலமும், அத்தகைய விவரங்களை DEOs, CEOs முறையாகக் கண்காணித்து, தகுதியான மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) மூலம் தொடர் பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அண்மைச் செய்தி: ‘விருமன்; ‘உங்கள் அனைவரின் அன்பும் எங்களுக்கு வேண்டும்’ – நடிகர் சூர்யா ட்வீட்’

முதற்கட்டமாக WBTST செயலியை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் (CEOs), மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (DEOs) இன்று சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பயிற்சி வழங்கினர்.

விளையாட்டில் ஆர்வம்மிக்க மாணவர்களைப் பள்ளிப்பருவத்திலிருந்தே அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் முயற்சியாக புதிய நடைமுறை இருக்கும் என்றும், இதன்மூலம் தங்கள் பணியை இதுவரை சரிவர மேற்கொள்ளாத உடற்கல்வி ஆசிரியர்களும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்படுவர் என்றும், இனி யாரும் தங்கள் கடமையிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.