உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி! – உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொண்டார் டெல்லி அமைச்சர் அதிஷி!

உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிப்பட்ட டெல்லி அமைச்சர் அதிஷி தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொண்டார். டெல்லியில் மாதக்கணக்கில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.  அந்த மாநில அரசு அண்டை மாநிலங்களான…

உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிப்பட்ட டெல்லி அமைச்சர் அதிஷி தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொண்டார்.

டெல்லியில் மாதக்கணக்கில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.  அந்த மாநில அரசு அண்டை மாநிலங்களான இமாச்சலப் பிரதேசம்,  ஹரியானாவிலிருந்து டெல்லிக்கு கூடுதல் நீர் பெற்றுத்தர உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இமாச்சலப் பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு வரும் நீரை,  தடுக்கக் கூடாது என ஹரியானா மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கிறது.  இவ்விவகாரத்தில் ஆளும் ஆம் ஆத்மி அரசை கண்டித்து,  பாஜக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.  டெல்லி அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த,  ஹரியானாவில் உள்ள தங்கள் ஆட்சியை பயன்படுத்தி, செயற்கையாக தண்ணீர் தட்டுப்பாட்டை உருவாக்குவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி  கூறுகையில், “ஹரியானா மாநில அரசு யமுனையில் இருந்து டெல்லிக்கு உரிய தண்ணீரை விடுவிக்கவில்லை. கடந்த ஜூன் 21ம் தேதி 110 மில்லியன் கேலன் (எம்ஜிடி) தண்ணீரை மட்டுமே அம்மாநில அரசு விடுவித்துள்ளது” என கூறினார்.

இதையும் படியுங்கள் : திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்தவே சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

மேலும்,  டெல்லிக்கு உரிய தண்ணீரை விடுவிக்காத ஹரியானா மாநில பாஜக அரசை கண்டித்து,  தெற்கு டெல்லியில் உள்ள போகலில் ‘ஜல் சத்தியாகிரகம்’ என்ற பெயரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அமைச்சர் அதிஷி கடந்த 21ம் தேதி தொடங்கினார்.

28 லட்சம் மக்களுக்கான தண்ணீரை ஹரியானா அரசு விடுவிக்கும் வரை தான் எதுவும் உண்ணமாட்டேன் என தெரிவித்த அமைச்சர் அதிஷி,  4-வது நாளாக நேற்று போராட்டத்தை தொடர்ந்தார்.  ஆனால், தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்த அமைச்சர் அதிஷிக்கு இன்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக  எல்என்ஜேபி மருத்துவமனைக்கு இன்று அதிகாலை கொண்டு செல்லப்பட்டார்.

அமைச்சர் அதிஷிக்கு சர்க்கரை அளவும்,  ரத்த அழுத்தமும் குறைந்துள்ளதால்,  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்நிலையில், அமைச்சர் அதிஷி உடல்நலன் மோசமடைந்ததையடுத்து,  தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.