டெல்டா பாசனத்திற்காக, கல்லணையிலிருந்து வரும் 16-ம் தேதி தண்ணீர் திறக்கப்படவுள்ளது.
ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அப்படி திறந்து விடப்படும் தண்ணீர் மூன்று, நான்கு நாட்களில் தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடையும். அதன்பிறகு கல்லணையில் முறைப்படி தண்ணீர் திறந்து விடப்படும். அது போல் இந்த ஆண்டும் கடந்த ஜூன் 12-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார்.
அணையிலிருந்து தொடக்கத்தில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்பட்ட நிலையில், அது படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி, அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், கரூர் மாவட்டம் மாயனூரைக் கடந்து முக்கொம்பை நோக்கி வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் நாளை இரவு கல்லணைக்கு காவிரி நீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களின் பாசனத்துக்காக, கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் வருகிற வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு தண்ணீர் திறந்துவிடப்படவுள்ளது.
இதில், டெல்டா மாவட்டத்துக்கு உள்பட்ட அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வா் எனக் கூறப்படுகிறது.







