சிதம்பரம் கோயிலில் தமிழிசை சௌந்தரராஜன் அவமரியாதை செய்யப்பட்டாரா?

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தன்னை யாரும் அவமானப்படுத்தவில்லை என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கமளித்துள்ளார்.   புதுச்சேரியில் 2022-23ஆம் ஆண்டிற்கான மாநில திட்டக்குழு கூட்டம் தலைமைச் செயலக கருத்தரங்கு கூடத்தில்…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தன்னை யாரும் அவமானப்படுத்தவில்லை என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கமளித்துள்ளார்.

 

புதுச்சேரியில் 2022-23ஆம் ஆண்டிற்கான மாநில திட்டக்குழு கூட்டம் தலைமைச் செயலக கருத்தரங்கு கூடத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எதிர் கட்சித் தலைவர் சிவா, தலைமை செயலர், டிஜிபி, அரசு செயலர்கள் கலந்துகொண்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் 2022-23 ஆண்டு பட்ஜெட்டின் அளவை இறுதி செய்வது குறித்த விரிவாக விவாதிக்கப்பட்டது.

 

கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், புதுச்சேரியில் அனைத்து துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பட்ஜெட் தொடர்பான ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றது என்றார். எந்தெந்த துறைகளுக்கு தேவையான நிதி ஒதுக்குவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டதாக கூறினார். அனைத்து துறைகளிலும் தேவையான நிதி ஒதுக்கப்பட்டு வருவதாகவும், வருகிற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யப்படும் என்றும் இது ஒரு நல்ல பட்ஜெட் ஆக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழிசை செளந்தரராஜன் அவமரியாதை செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், சிதம்பரம் கோயிலில் இன்று காலை சுவாமி தரிசனத்திற்கு சென்றிருந்தாகவும், கோயில் வளாகத்திற்குள் தான் அமர்ந்த போது இங்கே அமரக்கூடாது என்றும் அருகில் உள்ள இடத்தில் ஒருவர் சொன்னதாகவும் கூறினார். அதனை அவமானமாக நினைக்கவில்லை என தமிழிசை சௌந்தரராஜன் விளக்கமளித்தார்.

மேலும் சிதம்பரம் கோயில் என்றாலே பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும், ஆனால் பிரச்சனைதான் வருகிறது என கூறினார். கோயிலின் பிரச்சனையை தீர்க்கப்படவேண்டும், மக்களின் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் அதற்கு சிவன் இருக்கிறார் என்று நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

பின்னர் பேசிய புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா, மின்துறை தனியார் மயமாகக் கூடாது, காலியாக உள்ள 7 ஆயிரம் அரசு காலிப்பணி இடங்களை நடப்பு ஆண்டுக்குள் நிரப்ப வேண்டும், நிலுவையில் உள்ள திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மக்களுக்கு பயன்பெறக்கூடிய முழுமையான பட்ஜெட்டாக இருக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.